தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தனது முக்கிய தளபதிகளை இழந்து அதிமுகவுக்குள் தனித்து விடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலை, கட்சிக்குள் தனது ‘ரீ என்ட்ரி’க்கான சாதகமான வாய்ப்பாக தினகரன் பார்க்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகையையும் அவரது அரசியல் நகர்வுகளையும் தீவிரமாக எதிர்ப்பதன் மூலம், அதிமுக தொண்டர்களின் நன்மதிப்பைத் திரும்பப் பெற முடியும் என அவர் நம்புகிறார். மேலும், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலேயே இபிஎஸ் தனது பிடியை இழந்து வருவதால், டெல்லி தலைமை இபிஎஸ்ஸை ஓரங்கட்டிவிட்டு, கட்சித் தலைமை மற்றும் அரசியல் அனுபவம் மிக்க தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தினகரன் கணக்கு போடுவதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், அண்ணாமலையின் விலகலுக்குப் பின் தமிழகம் குறித்த தனது எதிர்காலத் திட்டங்களை பாஜக தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது தினகரனுக்குக் கூடுதல் சாதகமாக மாறியுள்ளது. தமிழகத்தில் தவெக கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் சூழல் உருவானாலும், திமுக ஒருபோதும் பாஜக பக்கம் நகர்வதற்குத் தயாராக இல்லை. இதனால், வரும் 2029 பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் ஒரே பலமான கூட்டணி வாய்ப்பான அதிமுகவை பலப்படுத்தவே டெல்லி விரும்புகிறது. ஆனால், இபிஎஸ்ஸின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் இன்னும் தீராததால், அதிமுகவின் உட்கட்சி அரசியலை நன்கு அறிந்த, ஆளுமையுள்ள டிடிவி தினகரனுக்கு டெல்லி தலைமை முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.
