தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அமைத்துள்ள கூட்டணி ஆட்சிக்காலம் ஒரு தற்காலிகமானதும் ஊசலாடிக் கொண்டிருப்பதுமாகும் என்று விமர்சித்தார். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எத்தனை மாதங்களுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரியவில்லை என்றும், ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆக வந்தால் மட்டுமே உண்மையான ஆட்சி அமைக்க முடியும் என்றும் அவர் தவெக தலைமையைச் சாடினார்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக மற்றும் அமமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசிய தினகரன், பதவிக்காக தவெகவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை சட்டப்படி இழக்க நேரிடும் என்று எச்சரித்தார். சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் கொறடாவை அரசியல் கட்சித் தலைமைதான் நியமிக்க முடியும் என்பதால், கொறடாவின் முடிவே இறுதியானது என்றும், சபாநாயகர் இந்த விவகாரத்தை அதிக நாட்கள் கடத்த முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும், அமமுக சார்பில் மன்னார்குடியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜை தவெக அமைச்சரவையில் சேர்த்தால், அங்கு குதிரை பேரம் நடந்துள்ளது என்பது உறுதியாகும் என்றும், அப்படி நடந்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என்றும் கூறினார்.
அதிமுகவை ஊழல் கட்சி என்றும் இளக்காரமாகவும் பேசிய தவெகவுடன், அக்கட்சியின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ-க்கள் கைகோர்ப்பது நியாயமற்றது என்று தினகரன் சுட்டிக்காட்டினார். தவெகவிற்கு ஆதரவு அளிப்பது என்பது கொல்லிக்கட்டையை எடுத்துத் தங்களது தலையிலேயே சொரிந்து கொள்வதற்குச் சமம் என்றும், பதவிக்காக ஆதரிப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அதிமுகவை அழிக்க தவெகவின் ஏஜெண்டாக செங்கோட்டையன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பூசல்களைப் பார்த்து பாஜக தலைவர்கள் வருத்தப்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் குற்றம்சாட்டினார்.
