“செல்போனை பிடுங்கி வச்சிட்டாங்க” அவரை தூக்கிட்டாங்க… பகீர் கிளப்பும் டிடிவி தினகரன்… விஜய்க்கு எதிராகத் திரும்பிய மன்னார்குடி விவகாரம்..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மர்மமான முறையில் மாயமானது குறித்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். “காமராஜைத் தற்போது யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை; அவரது மொபைல் போனை யாராவது பிடுங்கி வைத்துள்ளார்களா அல்லது அவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை” என ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், காமராஜ் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்தே கையெழுத்திட்ட நிலையில், தற்போது அவர் விஜய் பக்கம் இருப்பதாகக் காட்டப்படுவது அப்பட்டமான “ஜனநாயகப் படுகொலை” என்று தினகரன் சாடினார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியோ அல்லது ஆசை காட்டியோ இழுக்கும் “குதிரை பேரம்” குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். டிடிவி தினகரனின் இந்த அதிரடிப் பேட்டியால், விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுமா அல்லது ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. (நன்றி: பாலிமர்)