மனோஜ் பாண்டியன் ஆழ்ந்து யோசித்து செயல்படக்கூடியவர், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது வருத்தமளிக்கின்றது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. தற்போது இருப்பது அதிமுகவே இல்லை. எடப்பாடி திமுக தான் தற்போது உள்ளது. இதுபோன்று பேசினால் வீடியோ வெளியிடும் உதயகுமார் போன்றவர்கள் கோபித்து கொள்கிறார்கள்.
உண்மையான எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா தொண்டர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிக்க வைத்த அவர்களே இவர்கள்தான். 2017 ஆம் ஆண்டு முதல் கொல்லிக்கட்டையை கொண்டு சொறிந்து வருகிறார்கள். செங்கோட்டையன் நீக்கம் பிரச்சனை தற்போது கொழுந்து விட்டு எரிகிறது. அதிமுக கடந்த தேர்தலில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவு செய்தார்கள். அந்த பணத்தில் தமிழகத்தில் 5 முதல் 10 தொழிற்சாலைகளை தொடங்கியிருக்கலாம். அதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு எவ்வளவு ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
இந்த முறை அதற்கு வாய்ப்பே கிடையாது. மக்கள் யாரும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. எடப்பாடி பழனிச்சாமி திருந்தவே மாட்டார். பழனிச்சாமி நடவடிக்கை காரணமாக மனம் உடைந்து தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறும் கூட்டணியும் உறுதியாக வெற்றி பெறுவோம். தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வந்துவிட்டது போல சிறுவன் பலூனை பார்த்து குதிப்பது போல எடப்பாடி பழனிச்சாமி குதித்தார். அடுத்த இரண்டு நாட்களில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலேயே கூட்டணி அமையும் என அவர்கள் கட்சியினர் கூறிவிட்டனர். ஆனால் கூட்டணி குறித்து எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
