“ஸ்டாலினுக்கு ஆதரவா?…. பாய்ந்த டிடிவி தினகரன்”….. ‘அந்த கத்துக்குட்டி யார்?’….. கொதித்த அமமுக தொண்டர்கள்…..!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

மிசா சட்டம் மற்றும் ஸ்டாலினின் சிறைவாசம் குறித்து அண்மைக்காலமாக மேலெழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவரின் கடந்தகால தியாகங்களை இழிவுபடுத்துவது அரசியல் நாகரிகமல்ல என்று குறிப்பிட்ட அவர், கருணாநிதியின் மகனாக இருந்தாலும் மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறித் தனது சொந்த முயற்சியாலேயே 2021-ல் முதலமைச்சரானார் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மிசாவில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் சந்தித்த சித்திரவதைகளை அண்மைக்காலமாக அரசியலுக்கு வந்த “கத்துக்குட்டிகள்” வன்மத்தோடு பேசி வருவது ஏற்க முடியாதது என்றும் சாடினார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், அமமுக இந்தத் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை அளிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ-க்கள் உடல்நலக்குறைவால் மறைந்தால் மட்டுமே இடைத்தேர்தல் வருவது இயல்பு; ஆனால், பதவி ஆசையினாலும் சுயநலத்தினாலும் வெற்றி பெற்ற கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு, ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தவர்களால் இந்தத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்று சாடினார். எனவே, இந்த இடைத்தேர்தல் துரோகிகளுக்குப் பாடம் புகட்டும் களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறினார்.

   

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான திட்டத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மீனவர் கிராமப் பகுதியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய கட்டடம் கட்டுவது முட்டாள்தனமான முடிவு என்றும், இதனால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். யாரோ ஒரு ஜோதிடர் சொன்னார் என்பதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா எனக் கேள்வி எழுப்பிய அவர், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்கள், அறிவிக்கப்படாத மின்வெட்டு என அனைத்துத் துறைகளிலும் தற்போதைய ஆட்சி தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

   

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின்வெட்டிற்கு முகாந்திரமில்லாத சாக்குப்போக்குகளைக் கூறிவரும் மின்துறை அமைச்சரின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் தலைவர்களையே கடுமையாகக் கண்டிக்க வைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். வாக்களித்த மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் துரோகம் இழைத்து, குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போல ஆட்சி நடத்தி வரும் இந்த முதிர்ச்சியற்ற அரசுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த நேரத்தில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று கூறி தனது கண்டன உரையை டிடிவி தினகரன் நிறைவு செய்தார்.