“முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்”… திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்… அமித்ஷா போட்ட ஒரே போன் கால்…!

By Nanthini on தை 19, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணையவுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மற்றும் பாமகவுடன் ஏற்கனவே கைகோர்த்துள்ளார். இந்த நிலையில், கடந்த கால கசப்புகளை மறந்து டிடிவி தினகரனும் இந்தக் கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த தினகரன், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தக் கூட்டணி மாற்றத்திற்குப் பின்னால் பாஜகவின் அழுத்தம் மற்றும் மேலிட உத்தரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க டிடிவி தினகரனை இணைக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இதற்குப் பச்சைக்கொடி காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி கைகோர்க்க உள்ளனர்.

   

“அம்மா ஆட்சி” மீண்டும் அமைய வேண்டும் என்ற ஒற்றை இலக்கிற்காக தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனது கட்சித் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பெருமளவில் திரண்டு வருமாறு அவர் கட்டளையிட்டுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதிமுக மற்றும் அமமுக அணிகள் ஒன்றிணைவது தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களையும், வரும் தேர்தலில் கடும் போட்டியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.