அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, அதனைத் தனது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடி வருகிறார். லெபனான் அதிபர் ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், “உலகெங்கிலும் நான் தீர்த்து வைக்கும் 10-வது போர் இது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்காலிகப் போர் நிறுத்தம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் (அமெரிக்க நேரப்படி) அமலுக்கு வந்துள்ளது. 1983-ம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிக முக்கியமான பேச்சுவார்த்தை இது எனக் குறிப்பிட்ட டிரம்ப், நிரந்தர அமைதியை நிலைநாட்ட இரு நாட்டுத் தலைவர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார். இந்த விவகாரத்தில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே என்றும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் சவால்கள் நீடிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் “இதைப் செய்து முடிப்போம்” (Let’s get it done) எனப் பதிவிட்டுள்ள நிலையில், இந்த 10 நாள் அவகாசம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிலையான அமைதிக்கு வழிவகுக்குமா என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
