ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் ஒரு பதற்றமான சூழலை எட்டியுள்ளது. சமீபத்தில் ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறந்தது சர்வதேச அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாவிட்டால் மீண்டும் இப்பாதை மூடப்படும் என்ற ஈரானின் எச்சரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிரம்ப்-ன் சமீபத்திய கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்குத் தெளிவற்ற பதிலை அளித்தார். வரும் புதன்கிழமைக்குள் இறுதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், போர் நிறுத்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்றும், தேவைப்பட்டால் மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “47 ஆண்டுகால ஈரானுடனான மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற அவரது பேச்சு ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தீவிரம் அடையக்கூடும் என்பதையே காட்டுகிறது.
உலக எரிபொருள் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்தும் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், ஈரான் அங்கு எந்தவிதக் கட்டணமோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்தில் இந்தக் கட்டண வசூல் முறை முக்கியப் பங்காக இருக்கும் நிலையில், டிரம்ப்-ன் இந்த முரண்பட்ட நிலைப்பாடு அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த வளர்ந்து வரும் போர் பதற்றம் வெறும் இரு நாடுகளின் பாதுகாப்பு விவகாரமாக மட்டும் அமையாமல், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் சிறு தடங்கலும் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்பதால், சர்வதேசச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது. வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்படுவது உலகளாவிய விநியோகச் சங்கிலியைச் சீர்குலைக்கும் என்பதால், உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த நகர்வுகளைக் கவனித்து வருகின்றன.
