ஈரானின் ‘அமைதி’ ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த டிரம்ப்.. “இனி அவர்கள் சிரிக்க மாட்டார்கள்” நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். ஈரானின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தமக்கு உடன்பாடு இல்லாத வகையில் இருப்பதாகவும், இதனை எவ்விதத்திலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானின் பதில் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடியுள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லெபனான் உள்ளிட்ட அனைத்து முன்னணிகளிலும் போரை நிறுத்த வேண்டும் என்றும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்க வேண்டும் மற்றும் கடல்சார் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஈரானின் பதிலில் இடம்பெற்றிருந்தன. ஆனால், இவை எதற்கும் இணங்க மறுத்துள்ள டிரம்ப், ஈரான் பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் ‘விளையாடி’ வருவதாகவும், இனி அவர்கள் சிரிப்பதற்கு இடமிருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

   

முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்தின் மூலம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் குறைக்கவும், மீதமுள்ளவற்றை மூன்றாம் நாட்டிற்கு மாற்றவும் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், டிரம்பின் தற்போதைய கடும் நிலைப்பாட்டால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க இராணுவம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.