அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கில் நிலவி வரும் மறைமுகப் போர், தற்போது இந்தியக் கப்பல் ஊழியர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டு, “அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மிக அருகில் நெருங்கிவிட்டன” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த ஒப்பந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக மறுத்துள்ளார். “ஈரான் தரப்பில் இருந்து கசிந்த ஒப்பந்த விவரங்கள் உண்மைக்கு முற்றிலும் புறம்பானவை. நேர்மையாகச் செயல்படத் தெரியாத ஈரானுடன் நல்லெண்ண அடிப்படையில் பேச முடியாது” என்று ட்ரம்ப் விளாசியுள்ளார். மேலும், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸும், “ஈரானுக்குப் பணம் எதுவும் உடனடியாக வழங்கப்படாது, எந்த நிதியும் ரிலீஸ் செய்யப்படவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பாதுகாப்பு கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய ஊழியர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலாவு நாட்டுக் கொடி ஏந்திய ‘எம்டி செட்டபெல்லோ’ என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், துரதிர்ஷ்டவசமாக மூன்று இந்திய மாலுமிகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களை ‘ஆழ்ந்த கவலைக்குரியது’ என்று வர்ணித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், உடனடியாக இத்தகைய அத்துமீறல்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேறிய இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நேற்று இரவும் ட்ரோன் (Drone) தாக்குதல் நடத்த முயன்றதாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே இந்தியக் கப்பல்களுக்கு எதிராக ஈரான் நடத்திய, முறியடிக்கப்பட்ட ட்ரோன் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; அவர்கள் தங்களை உடனே மிக வேகமாகத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட “நெருக்கமாக” இருப்பதாக ஈரான் கூறினாலும், ட்ரம்பின் தற்போதைய கடுமையான எதிர்வினைகள் இந்த ஒப்பந்தம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையே காட்டுவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஈரான் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக மதித்து, இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தினால் மட்டுமே மத்திய கிழக்கில் சுமுகமான சூழல் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
