அமெரிக்க மாப்பிள்ளை கனவு காலி?…. ட்ரம்ப்பின் ஒரே அறிவிப்பால் கதறும் H-1B குடும்பங்கள்…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 1, 2026

Spread the love

அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்-1பி விசா தாரர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்-4 பணி அனுமதியை (H-4 EAD) ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த இந்த நடைமுறையை மாற்றியமைக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ள இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களை மட்டுமல்லாமல், இந்தியாவின் திருமண சந்தையையும், குறிப்பாக அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கான வரதட்சணை மார்க்கெட்டையும் தலைகீழாக மாற்றத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, H-4 பணி அனுமதி பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள்; அதில் 94 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கல்வித் தகுதியும் திறமையும் வாய்ந்த இந்தியப் பெண்கள் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகும் சட்டப்பூர்வமாகப் பணியாற்றவும், குடும்ப வருமானத்திற்குப் பங்களிக்கவும் இந்த விசா உறுதுணையாக இருந்தது. ஆனால், இந்தப் பணி உரிமை பறிக்கப்பட்டால், இந்திய ஐடி வரன்களின் ஆதிக்கம் கொண்ட வரதட்சணை சந்தை கடுமையான சரிவைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

   

இந்த விசா மாற்றத்தின் நேரடித் தாக்கம் சென்னை, ஹைதராபாத் மற்றும் குஜராத் போன்ற முக்கியப் பகுதிகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் டாலர் வருமானம் மற்றும் இரட்டைச் சம்பாத்தியத்தை நம்பிக் கொடுக்கப்பட்டு வந்த கோடிக்கணக்கிலான வரதட்சணைப் பேரங்கள் தற்போது கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளன. சென்னையில், தங்களது மகள்களின் கேரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோர்கள், வேலை செய்ய உரிமையில்லாத H-4 விசாவில் அமெரிக்கா சென்று வீட்டில் முடங்குவதை விட, இந்தியாவிலேயே வேலை செய்யும் உள்நாட்டு ஐடி வரன்களையே அதிகம் விரும்புகின்றனர். அதேபோல குஜராத்தி சமூகத்தினரும் ஒற்றை வருமானத்தில் அமெரிக்காவில் வாழ்வது கடினம் என்பதை உணர்ந்து கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

   

அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவக் காப்பீடு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் மிக அதிகம் என்பதால் கணவன், மனைவி இருவரும் பணியாற்றினால் மட்டுமே குடும்பத்தைச் சமாளிக்க முடியும். H-4 பணி அனுமதி ரத்துடன் சேர்த்து, புதிய H-1B ஊழியர்களுக்கான கட்டண உயர்வு மற்றும் வேலை இழந்தால் வழங்கப்படும் 60 நாள் சலுகைக் காலத்தை ரத்து செய்யும் முடிவுகள் அமெரிக்க வேலைவாய்ப்பின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த நடைமுறை தற்போது ஒரு முன்மொழிவாக மட்டுமே இருந்தாலும், உருவாகியுள்ள விசா நிச்சயமற்ற தன்மை இந்தியத் திருமண சந்தையில் நிலவி வந்த ‘அமெரிக்க மாப்பிள்ளை’ மாயையை உடைத்து எறிந்துள்ளது.