“எங்களை இழுக்காதீங்க” – டிரம்புக்கு விழுந்த மரண அடி… அமெரிக்காவுக்கு ‘நோ’ சொன்ன ஐரோப்பிய நாடுகள்: ஈரானுக்கு அடித்த ஜாக்பாட்….!

By Nanthini on சித்திரை 14, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், சர்வதேச அரங்கில் டொனால்ட் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது. ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டு அந்நாட்டின் வர்த்தகத்தை முடக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளே இந்த விவகாரத்தில் முகம் திருப்பி நிற்கின்றன. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த முற்றுகை நடவடிக்கைக்கு எவ்வித ஆதரவும் கிடைக்காதது, அமெரிக்கா தனது அரசியல் ராஜதந்திரத்தில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த விவகாரத்தில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த ஒற்றைப்படை முடிவிற்கு பிரிட்டன் ஆதரவு அளிக்காது என்பதோடு, இந்தத் தேவையற்ற போரில் தங்கள் நாடு இழுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். “நீ போகும் பாதை ஒத்தையடிப் பாதை, அதில் எங்களைத் துணைக்கு அழைக்காதே” என்கிற ரீதியில் பிரிட்டனின் பதில் அமைந்திருப்பது டிரம்பின் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

   

பிரிட்டனைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும் அமெரிக்காவின் திட்டத்தை நிராகரித்துள்ளன. பிரான்ஸ் அதிகாரிகள் இது குறித்துப் பேசுகையில், அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைக்கு மாறாக, ‘அமைதிக்கான பல்தேசிய குழு’ அல்லது ‘தற்காப்பு சார்ந்த குழு’ ஆகியவற்றை உருவாக்கி, பிரிட்டனுடன் இணைந்து மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் ஆதிக்கப் போக்குக்கு எதிரான ஒரு மாற்றுச் சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், டிரம்பின் அறிவிப்புகள் தெளிவற்றவை என்று சாடியுள்ள ஜெர்மனி, எவ்வித ராணுவ நடவடிக்கையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதில்லை என்று கைவிரித்துவிட்டது.

   

தன்னை ஒரு ரட்சகராகவும், “கடவுளே நான்தான்” என்றும் சமூக வலைதளங்களில் பிம்பப்படுத்திக் கொள்ளும் டிரம்ப், நிஜ உலக அரசியலில் தனது நட்பு நாடுகளாலேயே கைவிடப்பட்டிருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கட்டுப்பாட்டைக் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்காவின் கனவுக்கு, ஐரோப்பிய நாடுகளின் இந்த ‘சைலண்ட்’ எதிர்ப்பு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இதனால் ஈரான் விவகாரத்தில் எவ்வித வெளிநாட்டுக் கூட்டணியும் இன்றி அமெரிக்கா தற்போது தனியாகத் தொங்கவிடப்பட்டிருக்கிறது.