மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே, கத்தாரின் எல்.என்.ஜி எரிவாயு ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே எரிசக்தி ஆலைகளை இலக்கு வைத்து மாறி மாறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஈரான் தவறுதலாக கத்தாரைத் தாக்கியிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கத்தார் மீது மீண்டும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரானின் மிகப்பெரிய எரிசக்தி நிலையமான தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை அமெரிக்கா முழுமையாக அழிக்கும் என்றும், இந்தத் தாக்குதல் ஈரானுக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரித்துள்ளார். ஈரான் இனிமேல் இத்தகைய அறிவீனமான மற்றும் வன்முறையான தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்றால், இஸ்ரேல் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் கத்தார் எரிவாயு ஆலை மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்கோ அல்லது கத்தாருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஈரானின் தெற்கு பார்ஸ் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய சிறிய அளவிலான தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடந்தால், தான் தயங்காமல் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று அவர் ஈரானை எச்சரித்துள்ளார்.
