அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும், அங்கு எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனாலட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். போருக்கு முன்பாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கடந்து சென்ற நிலையில், தற்போது 18 மில்லியன் பேரல்கள் கடந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என மறுபெயரிட வேண்டும் என்றும், அதை அமெரிக்கப் பிராந்தியமாக அறிவிப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்றும் ட்ரம்ப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எனினும், நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது வெறும் பரிந்துரை மட்டுமே எனத் தெளிவுபடுத்தினார். அதேநேரம், ஹார்முஸ் பகுதியில் ஈரான் நிறுவியிருந்த புதிய ராணுவ உபகரணங்களை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்டதாகவும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப்பின் கூற்றுகளுக்கு மாறாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக சர்வதேசத் தரவுகள் தெரிவிக்கின்றன. கேப்லர் அமைப்பின் தரவுகளின்படி, செப்டம்பர் 2 அன்று வெறும் 6 வர்த்தகக் கப்பல்கள் மட்டுமே இந்த ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளன. ஈரானின் பதிலடி நடவடிக்கைகளினாலும், பல கப்பல்களை ஈரான் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாலும், அப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான அபாயங்கள் உச்சத்தை எட்டியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பொதுமக்களின் திருமண விழா இலக்காகிப் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைக்கும் புதிய உத்தியைக் கையாளப்போவதாகவும் ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.
