நோட்டா நாடுகள் உதவி செய்யாவிட்டால்… அப்பறம் என்ன நடக்கும் தெரியுமா..? ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் கொந்தளிக்கும் டிரம்ப்…!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

ஈரான் உடனான போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பாதையை மீண்டும் திறக்க நேட்டோ அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். “இந்த இக்கட்டான சூழலில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவுக்கு உதவாவிட்டால், அந்த அமைப்பிற்கு எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகள் (Very bad future) ஏற்படும்” என்று பினான்சியல் டைம்ஸ் (Financial Times) இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா நேட்டோ நாடுகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், தற்போது அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது அவர்கள் பின்வாங்குவது முறையாகாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனா தனது 90% எண்ணெயை இந்தப் பாதை வழியாகவே பெறுவதால், அவர்களும் இந்தப் பாதுகாப்புப் பணியில் இணைய வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாக வைத்திருக்க சீனா முன்வராவிட்டால், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பைத் தான் ஒத்திவைக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

   

தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கவும், எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சுமார் ஏழு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அந்தப் பகுதிக்குத் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்பத் தற்போது திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை எகிறியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைகள் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.