மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா தனது வர்த்தக மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி வருகிறது. ஈரானுக்குத் தேவையான நிதி உதவிகளை வர்த்தகம் மூலம் வழங்குவது மட்டுமின்றி, ஐநா சபையில் ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைத் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது நேரடியாகச் சீனாவைக் குறிவைக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறையின் தகவல்படி, சீனா அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை, குறிப்பாக ‘MANPAD’ எனப்படும் தோளில் சுமந்து செல்லும் ஏவுகணைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதங்களை நேரடியாக அனுப்பாமல், மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக அனுப்ப சீனா முயற்சித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சீனாவின் இந்த ராணுவ உதவித் திட்டம் பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் இந்த 50 சதவீத வரி விதிப்பு எச்சரிக்கை சீனப் பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. திங்கள்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில் ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் லேசான சரிவைச் சந்தித்தாலும், அடுத்த சில மணிநேரங்களில் சந்தை மீண்டெழுந்து உயர்வுடன் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் சீனச் சந்தை சில சரிவுகளைச் சந்தித்திருந்தாலும், கடந்த ஆண்டை விட 21.69 சதவீதம் அதிக வளர்ச்சியில் இருப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் வரி மிரட்டல்கள் சீனப் பொருளாதாரத்தை இப்போதைக்கு முடக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இருப்பினும், சீனாவுடன் நேரடியாக மோதுவதை டிரம்ப் தவிர்த்து வருகிறார். சீனா இத்தகைய ஆயுத உதவிகளைச் செய்யாது எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சீனாவுக்குத் தேவையான எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தூதுவிட்டுள்ளார். குறிப்பாக, வெனிசுவேலா எண்ணெயைச் சீனாவுக்கு வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு உலக வர்த்தகம் மற்றும் அமைதி ஒப்பந்தங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
