7 வருடக் காதல்… புது வீடு, ஏசி வசதி… வேறொருவருடன் கல்யாணம்…. கணவனே அரங்கேற்றிய பயங்கரம்…. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே காதலி கைவிட்ட விரக்தியில் காதலன் மீது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து நடத்திய கொலை முயற்சி தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனாரான விவேக் (27) என்பவரும், தங்கமலர் (26) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இக்காலத்தில் விவேக் தனது காதலிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்ததோடு, எதிர்கால வாழ்விற்காகப் புதிய வீடு கட்டி, அதில் ஏசி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வசதிகளையும் செய்து வைத்திருந்தார்.

ஆனால், காதலித்துவிட்டு விவேக்கிற்குத் தெரியாமல் தங்கமலருக்கு திவேக் என்ற கப்பல் ஊழியருடன் திருமணம் நடந்துள்ளது. இந்தச் செய்தி விவேக்கிற்குப் பெரிய ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்தது. திருமணமாகியும் தங்கமலரை மறக்க முடியாத விவேக் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றதுடன், வேறுவழியின்றி அவரது கணவர் திவேக்கின் செல்போனுக்கே தனது காதலை வெளிப்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

   

குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவேக்கும், தங்கமலரும் தங்களது உறவினரான சுயம்புலிங்கத்துடன் சேர்ந்து விவேக்கைத் தேடிச் சென்றுள்ளனர். பறக்கை அருகே திருநகர் சந்திப்பில் விவேக் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது மீது காரை மோதி கீழே தள்ளியுள்ளனர். பின்னர் சாலையில் நிலைதடுமாறி விழுந்த விவேக்கை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

   

இந்தக் கோரத் தாக்குதலில் தலையின் பின்பகுதி, கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த விவேக், உடனடியாக மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவேக்கின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையின் முடிவில் திவேக், தங்கமலர் மற்றும் தங்கச்செல்வன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்; தலைமறைவாக உள்ள சுயம்புலிங்கத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 7 வருடக் காதல் விவகாரம் இறுதியில் அரிவாள் வெட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் முடிவடைந்துள்ள இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.