தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தனது முதல் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் விஜய். தொடர்ந்து அணிவகுப்பு ஊர்தியில் அவர் கம்பீரமாக வலம் வந்தபோது, கேலரியில் இருந்த முக்கியப் பிரமுகர்களுக்குக் கையுயர்த்தி சல்யூட் அடித்தார். அப்போது முதல் வரிசையில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோருடன் நடிகை திரிஷாவும் அமர்ந்திருந்தார். விஜய்யைப் பார்த்ததும் பெற்றோர் கைகூப்பி வணக்கம் தெரிவிக்க, மஞ்சள் நிறச் சேலையில் பேரழகாக வந்திருந்த திரிஷா மட்டும் சட்டென்று எழுந்து நின்று விஜய்யைப் போலவே கம்பீரமாகத் திரும்ப சல்யூட் அடித்தார். அதை முதலமைச்சர் விஜய்யும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள, அங்கிருந்த கேமராக்கள் அனைத்தும் கணநேரத்தில் திரிஷாவின் பக்கம் திரும்பின.
ஏற்கனவே விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் திரிஷா முதல் வரிசையில் பங்கேற்று வாழ்த்தியது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருந்தது. விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலுக்கு திரிஷாதான் காரணம் எனப் பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அவரது தொடர்ச்சியான இந்த பொது நிகழ்வுகளின் வருகை மக்கள் மத்தியில் பல சந்தேகக் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
முன்னதாக விஜய் விவாகரத்து செய்யப்போவதாகச் செய்திகள் கசிந்தபோது, இருவரும் இணைந்து விஐபி திருமணம் ஒன்றில் பங்கேற்றது, தேர்தலில் வெற்றி பெற்றதும் திருப்பதி சென்றுவிட்டு நேராக விஜய்யின் வீட்டிற்குத் திரிஷா சென்றது மற்றும் அஜித்தின் தாயார் மறைவின் போது ஒன்றாகச் சென்று அஞ்சலி செலுத்தியது எனத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், நாட்டின் மிக முக்கியமான இந்த சுதந்திர தின விழாவிலும் விஜய்யின் பெற்றோர் அருகிலேயே திரிஷா அமர்ந்திருந்தது, விஜய்-சங்கீதா மீண்டும் இணைந்துவிடுவார்கள் என நம்பியிருந்த “சங்கீதா ஆர்மி” ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஒருபக்கம் திரிஷாவின் சல்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வர, மறுபக்கம் சங்கீதாவின் ஆதரவாளர்கள் அப்செட்டில் கொந்தளித்து வருகிறார்கள். எது எப்படியோ, இந்த விழாவில் தேசியக் கொடியேறியதை விடவும், விஜய்யும் திரிஷாவும் பரிமாறிக்கொண்ட அந்த ஒற்றைச் சல்யூட் தான் இப்போது தமிழகத்தின் முதன்மை ‘ஹாட் டாபிக்காக’ மாறியிருக்கிறது!
