தமிழகத் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய விஜய் குறித்த கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்துச் சென்றது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் திரிஷா தொடர்பான பல்வேறு செய்திகள் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பேசுபொருளாகி வரும் நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஒன்றாகப் பங்கேற்றது தொடர்பான செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது ஒருபுறமிருக்க, தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், நடிகை திரிஷா சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த செய்தியாளர்கள், “நீங்களும் விஜய்யும் ஒரே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையாகி வருகிறதே, இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வியெழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விக்குத் திரிஷா எந்தவிதமான பதிலோ விளக்கமோ அளிக்கவில்லை.
கேள்விகளைத் தவிர்த்த திரிஷா, மிகவும் அமைதியாகவும் வேகமாகவும் அங்கிருந்து நகர்ந்து விமான நிலையத்திற்குள் சென்றார். அவர் மவுனம் காத்துச் செல்லும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே பல வதந்திகள் பரவி வரும் நிலையில், திரிஷாவின் இந்த மவுனம் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மேலும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
