உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் மூன்று பேரைச் சுட்டுக்கொன்ற முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பார்ட்டியில், முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜீத்து சைனி என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தலைமறைவான இவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில், வாகனச் சோதனையின்போது போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற ஜீத்து சைனியைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்திச் சுட்டுக் கொன்றனர். காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் உயிர் தப்பவில்லை. சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு கூட்டாளியைத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய கேக் பூசும் கலாட்டா, நான்கு பேரின் உயிரைப் பறித்ததோடு என்கவுண்டரிலும் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
