மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தங்களது கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அபிஷேக் பானர்ஜி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனார்பூர் பகுதிக்குச் சென்றார். அங்கு கொல்லப்பட்ட கட்சித் தொண்டர் சஞ்சு கர்மாகர் என்பவரது குடும்பத்தினரை அவர் சந்திக்கவிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
அபிஷேக் பானர்ஜி சோனார்பூர் பகுதிக்கு வந்தபோது, அங்கு திரண்டிருந்த அடையாளம் தெரியாத கும்பல் மற்றும் பொதுமக்கள் திடீரென அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “திருடன்” என முழக்கமிட்டபடி, அவரது வாகனத்தின் மீது கல், முட்டை மற்றும் காலணிகளை வீசி எறிந்தனர். இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட பெரும் தள்ளுமுள்ளுவில் அபிஷேக் பானர்ஜியின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், அவரது கண்ணாடியும் உடைக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அவருக்கு ஹெல்மெட் அணிவித்து, பத்திரமாக அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பானர்ஜி, இந்தத் தாக்குதல் முற்றிலும் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றும், அவர்கள் தன்னைத் தீர்த்துக்கட்ட (கொலை செய்ய) முயன்றதாகவும் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே வேளையில், தேர்தல் முடிந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் காவல்துறையினர் அங்கு இல்லாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
