தலையே சுத்துதே..! “ரூ.37,000 வாடகை, ஊர் சுத்த 17000” மொத்தத்துல ஒரு மாசத்துக்கு ரூ.82000 தேவை… ட்ரெண்டாகும் பெங்களூர் ஐடி பெண்ணின் மாதச்செலவு…!!

By Soundarya on மாசி 28, 2026

Spread the love

பெங்களூருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் (CA) மீனல் கோயல், தனது குடும்பத்தின் மாதாந்திர செலவு விவரங்களை LinkedIn தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருவர் கொண்ட ஒரு குடும்பம் சௌகரியமாக வாழ மாதம் ரூ. 82,000 தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தொகை ஆண்டுக்கு சுமார் ரூ. 9.84 லட்சத்தை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செலவுப் பட்டியலில் அதிகபட்சமாக 2BHK வீட்டின் வாடகைக்காக ரூ. 37,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதர அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கு ரூ. 15,000, போக்குவரத்துச் செலவுகளுக்கு ரூ. 5,000, வீட்டு வேலை ஆட்களுக்கு ரூ. 4,000 மற்றும் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பயன்பாட்டுச் செலவுகளுக்கு ரூ. 4,000 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், பொழுதுபோக்கு, உணவகங்களுக்குச் செல்லுதல் மற்றும் ஜிம் சந்தா போன்றவற்றுக்காக மாதம் ரூ. 17,000 செலவிடப்படுவதாக அவர் விவரித்துள்ளார்.

   

இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்தச் செலவு விவரங்கள் மிகவும் யதார்த்தமாக இருப்பதாகக் கூறினாலும்,  பொழுதுபோக்குக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது அவசியமா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நகரத்தின் எந்தப் பகுதியில் வசிக்கிறோம் என்பதைக் கொண்டே இத்தகைய செலவுகள் அமையும் என்றும், நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு சவாலான பட்ஜெட் என்றும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.