முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். லண்டனில் மொத்தமாக ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், “வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்” என்று டிஆர்பி ராஜா சாடியுள்ளார். இந்த பயணம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைந்ததா அல்லது வெறும் விளம்பரப் படப்பிடிப்பிற்காக (ரீல்ஸ்) அமைந்ததா என்ற கேள்வியையும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிஆர்பி ராஜா, முதலீட்டுப் பயணத்தின் போது பயனுள்ள தகவல்களுக்குப் பதிலாக வெறும் வீடியோக்களும் ரீல்ஸ்களுமே அதிகம் வெளியானதாகக் குறிப்பிட்டார். “ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளையே தற்போதைய அரசு மீண்டும் புதிய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளது; முந்தைய ஆட்சியின் திட்டங்களைத் தொடர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் தமிழ்நாட்டிற்கான புதிய முதலீடுகள் எப்போது வரும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ரூ.3,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறப்படும் நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாகப் போடப்பட்டதா என்றும் சாடினார்.
மேலும் பல வெளிப்படைத்தன்மை கேள்விகளை எழுப்பிய அவர், மதர்சன் நிறுவனம் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிகழ்வில் ஒரு சாதாரண மேலாளர் மட்டுமே கையெழுத்திட வந்ததாகச் சுட்டிக்காட்டினார். ஹெல்மன் நிறுவன முதலீடு கடந்த மார்ச் மாதமே இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதைத் தாமதமாக அறிவித்தது ஏன் என்றும், ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் வில்சன் நிறுவனத்தின் முதலீடுகளையே மீண்டும் காட்டியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். எஃப்1 (F1) ரேஸ் கட்டமைப்புக்காக 2,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை எங்கிருந்து கையகப்படுத்தப் போகிறார்கள் என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்றார்.
திமுக ஆட்சிக் காலத்தில் முதலீட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட போது, செய்தியாளர்களுக்குத் தெளிவான அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டதையும், சென்னை திரும்பியதும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செய்தியாளர்களைச் சந்தித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், இம்முறை லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யோ அல்லது அவருடன் சென்ற அமைச்சர்களோ செய்தியாளர்களைச் சந்தித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். தொழில்துறை அமைச்சரோ, செயலாளரோ இல்லாமல், முதலீட்டாளர்கள் மாநாடோ அல்லது வெளிநாடு வாழ் தமிழர்களுடனான சந்திப்போ கூட இல்லாமல் இந்த பயணம் அமைந்தது குறித்து தனது அதிருப்தியை டிஆர்பி ராஜா பதிவு செய்தார்.
