இந்தியாவில் செல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செயற்கைக்கோள் வழித் தொடர்புகளுக்கான புதிய பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்வைத்துள்ளது. இனி மொபைல் போன்கள் அருகில் உள்ள டவர்களை மட்டும் நம்பியிருக்காமல், நேரடியாக விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களுடன் இணைந்து செயல்படும் வகையில் இக்கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்னல் அற்ற மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள் மற்றும் கடல் பகுதிகளில் கூட எவ்வித தடையுமின்றி அழைப்புகளையும் அதிவேக இணைய சேவையையும் பெற முடியும்.
டிராய் அளித்துள்ள இந்த முக்கியப் பரிந்துரைகளில் இரண்டு வகையான நேரடி சேவைகளான ‘மொபைல் சேட்டிலைட் சர்வீசஸ்’ மற்றும் ‘ஐஎம்டி அடிப்படையிலான D2D இணைப்பு’ ஆகியவை அடங்கும். எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட்போன்ற குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் நேரடியாகச் செயற்கைக்கோளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. இதற்காக எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில், இந்தச் செயற்கைக்கோள் அலைவரிசைகளை ஏற்கும் வகையில் ஹார்டுவேர் தொழில்நுட்பங்களைச் சேர்க்குமாறு மொபைல் உற்பத்தி நிறுவனங்களுக்கு டிராய் ஊக்கமளித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நேரடியாகச் செயற்கைக்கோள் இணைப்பைப் பெறுவதற்கான தொழில்நூட்பக் கூறுகள் இல்லை என்பதால், இத்திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வராது. மேலும், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் சேவை வழங்குநர்களுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் ஆகியவை இறுதி செய்யப்பட்ட பிறகே இதன் பலனை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்.
தற்போது இந்த நடைமுறை ஆரம்ப கட்டப் பரிந்துரை நிலையிலேயே இருப்பதால், செல்போன் டவர்களே தேவையில்லை என்ற முழுமையான செயற்கைக்கோள் சகாப்தம் வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையில் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி இந்தியாவின் கடைகோடிப் பகுதிகளுக்கும் தடையற்ற நெட்வொர்க் சேவையை வழங்குவதில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
