ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டம் சங்கவரம் மண்டலத்திற்குட்பட்ட கதிபுடி அருகே 16-ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்தது. விஜயநகரம் மாவட்டம் டென்காடா கிராமத்திலிருந்து விஜயவாடா நோக்கி பவானி மாலை அணிந்த பக்தர்கள் தனியார் பேருந்தில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். கதிபுடி வழியே சென்றுகொண்டிருந்தபோது பேருந்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக, சாலையோரமாக வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது அதிகாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காகப் பக்தர்கள் சிலர் பேருந்திலிருந்து இறங்கி சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நான்கு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
