நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி விடுதியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த யோகேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் அறையில் போதைப்பொருள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்கள் சோதனை நடத்தியபோது, யோகேஷின் அறையில் கஞ்சா இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது பெற்றோரை அழைத்து வருமாறு கண்டித்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான யோகேஷ், தனது பெற்றோரிடம் விஷயம் தெரிந்தால் எதிர்காலம் மற்றும் படிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் விரக்தியடைந்துள்ளார் . இதன் காரணமாக, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாணவரின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் நிலவியதுடன், பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
