உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற நபர் அமைதியான முறையில் தட்டிக் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னால் சென்ற டாக்ஸியில் இருந்து பிளாஸ்டிக் கப் மற்றும் ஸ்பூனை ஜன்னல் வழியாக வெளியே வீசியதை கவனித்த அனூப், உடனடியாக அந்த வாகனத்தை அணுகி, அவர்கள் போட்ட குப்பைகளை அவர்களிடமே திருப்பி ஒப்படைத்தார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தபோது, குப்பையை வீசிய 40-45 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனது செயலுக்காகச் சற்றே வெட்கமடைந்தார். அப்போது பேசிய அனூப், யாரையும் தேவையின்றி சங்கடப்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், ஆனால் படித்தவர்கள் இப்படிச் பொது இடங்களில் குப்பை போடுவது மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், இது உத்தரகண்ட் மாநிலம் பற்றியது மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் ஓடும் காரில் இருந்து குப்பைகளை வீசுவது முற்றிலும் தவறு என்று அவர்களுக்குப் புரியவைத்தார்.
https://www.instagram.com/reel/DYown6OTK9J/?utm_source=ig_web_copy_link
அனூப் நௌடியல் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “நமது நாட்டைத் தூய்மையாக வைத்திருப்போம், பொது இடங்களில் குப்பை போடுவதைத் தவிர்ப்போம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், மலைப்பகுதிகளைக் குப்பைத் தொட்டியாக மாற்ற வேண்டாம் என்றும் இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
