மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் கிடைத்த உற்சாகத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என்று அக்கட்சித் தலைமை திட்டமிட்டிருந்தது. தனது தனித்துவத்தைக் காட்டவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் சொந்தச் சின்னத்திலேயே களம் காண்பதை கமலஹாசன் முக்கியமாகக் கருதுகிறார்.
இருப்பினும், திமுக தரப்போ மநீம-விற்கு ஒற்றை இலக்க தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வருவதோடு, அவற்றை ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிப்பதாகத் தெரிகிறது. சொந்தச் சின்னம் கிடைத்தும் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால், மநீம நிர்வாகிகள் மத்தியில் பெரும் தயக்கம் நிலவுகிறது. டார்ச் லைட்டை ஆன் பண்ண முடியாமல், கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் முடங்கிப் போய்விடுவோமோ என்ற கவலை அக்கட்சியினரிடையே தற்போது பேசுபொருளாகியுள்ளது.
