தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அஜிதா, பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, கட்சி அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜய்யின் காரை மறித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அஜிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது சமாதானத்தை ஏற்றுக்கொண்ட அஜிதா, தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அஜிதா, “எனது இறுதி மூச்சு உள்ளவரை தவெகவிலேயே பயணிப்பேன். கட்சித் தலைமை மீதும், தளபதி விஜய் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
