“லைக் போட்டா திருப்பதி லட்டு பிரசாதமா?”…. தேவஸ்தானத்தை உலுக்கிய தமிழக வாலிபரின் ஷாக்கிங் வீடியோ… தேவஸ்தானம் அதிரடி பாய்ச்சல்….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த விவகாரம் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர், தனது முகநூல் பதிவை விரும்பி 30 பேருக்குப் பகிரும் நபர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படும் என்றும், தனது சேனலைப் பின்தொடர்பவர்களுக்கு லட்டு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு, தேவஸ்தானத்தின் மிகக் கடுமையான கண்காணிப்பு, தயாரிப்பு மற்றும் விநியோக முறைகளுக்கு உட்பட்டது என்பதால், இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

புனித பிரசாதத்தை வணிக ரீதியிலான மற்றும் சமூக வலைதளப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த விவகாரத்தில் அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேவஸ்தானத்தின் முதன்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி (CMSO) கே.வி.முரளிகிருஷ்ணா தலைமையிலான அதிகாரிகள் குழு இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் சண்முகம் என்ற நபருக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான லட்டுகள் எப்படி கிடைத்தது, வீடியோவில் காட்டப்பட்டுள்ள லட்டுகள் உண்மையிலேயே திருப்பதி கோவிலில் இருந்து பெறப்பட்ட பிரசாதம்தானா அல்லது போலி லட்டுகளா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

   

திருப்பதியைத் தவிர வேறு எங்குமே அதிகாரப்பூர்வமாகப் பெற முடியாத இந்த புனிதமான பிரசாதத்தின் கண்ணியத்தைக் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் எச்சரித்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி, சமூக வலைதளப் புகழுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முழு விசாரணை அறிக்கைக்குப் பிறகே இதில் தொடர்புடையவர்கள் மீதான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.