இந்த மூன்று படங்களுக்கும் ரிஷி மூலம் ஒரே திரைப்படம்தான்.. பலரும் அறியாத தகவல்!

By vinoth

Updated on:

1950 ஆம் ஆண்டு ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவா இயக்கத்தில் உருவான ராஷோமான் திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் சினிமா எடுப்பவர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த கதை சொல்லும் பாணியில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என ஆசை கொண்டனர். இந்த படத்துக்கு பிறகு ராஷோமான் எபக்ட் என்ற சொல்லே சினிமாவில் உருவாகியது.

இந்த படத்தின் திரைக்கதை அமைப்பை தழுவி அதன் பின்னர் பல திரைப்பட இயக்குனர்கள் தங்கள் படங்களை உருவாக்கினார்கள். அப்படி தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் ராஷோமான் பாதிப்பில் உருவாகின. இந்த படத்தை திரைப்பட விழாவில் பார்த்த தமிழ் சினிமா இயக்குனரும், வீணை வித்வானுமான எஸ் பாலச்சந்தர் அந்த நாள் திரைப்படத்தை உருவாக்கினார்.

   

சிவாஜி வில்லனாக நடித்த திரைப்படங்களில் ஒன்றாக உருவான அந்த நாள் திரைப்படத்தில் படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகனான சிவாஜி சுட்டுக் கொல்லப்படுவார். அதன் பிறகு அவர் கொலையை போலீஸ் விசாரிக்க அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பார்வையில் அவரைப் பற்றிய கதை ஒவ்வொரு விதமாக சொல்லப்படும். இறுதியில் சிவாஜிதான் வில்லன் என்பது தெரியவரும். இந்த படம் அப்போதைய தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. ஆனாலும் இன்று ஒரு கிளாசிக் திரைப்படமாக கொண்டாடப்படுகிறது.

ராஷோமான் வெளியாகி 54 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் அதன் திரைக்கதை அமைப்பை தழுவி விருமாண்டி என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்தில் கதையை பசுபதி சொல்லும் போது ஒருவிதமாகவும், கமல்ஹாசன் சொல்லும் போது வேறு விதமாகவும் இருக்கும்படி வித்தியாசமான முறையில் உருவாக்கி இருந்தார். அந்த நாள் படத்தை நிராகரித்த ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக்கொண்டு வெற்றிப்படமாக அங்கிகரித்தார்கள்.

விருமாண்டி வெளியான சில மாதங்களில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படம் ரிலீஸானது. இந்த படமும் ராஷோமானின் திரைக்கதையை தழுவிதான் உருவாக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக அப்போது வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்றிருந்த அமேரோஸ் பெர்ரோஸ் திரைப்படத்தின் கதையையும் தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் விருமாண்டி போல அல்லாமல் இந்த படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது.

author avatar