“என் புருஷன் இல்லாத வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம்”…. 7 மற்றும் 3 வயது மகன்களோடு ரயிலில் பாய்ந்த 23 வயது தாய்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தொழிலாளியான கோட்டையா என்பவரது மனைவி வள்ளி (23). சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கோட்டையா உயிரிழந்த நிலையில், வள்ளி தனது இரு மகன்களான பரத் (7) மற்றும் சந்தோஷ் (3) ஆகியோருடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) காலை சுமார் 9 மணியளவில் அரக்கோணத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன்பு, வள்ளி தனது இரு குழந்தைகளுடன் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் சம்பவத்தில் தாய் மற்றும் இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை இழந்த நிலையில் வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை வள்ளி எடுத்தாரா அல்லது உறவினர்களுடனான கருத்து வேறுபாடு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

   

கணவனை இழந்து தவித்த இளம் தாய், அறியாப் பருவத்தில் இருந்த தனது இரு பிஞ்சுக் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், மாறா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.