அதிமுகவுக்கு அடுத்த ஷாக்!.. இந்த வாரம் தவெக-வில் இணையும் 3 முக்கிய எம்எல்ஏக்கள்.. இபிஎஸ் கையில் எடுத்த ‘அஸ்திரம்’… பரபரக்கும் அரசியல் களம்..!!

By Muthu Mani on வைகாசி 31, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ.க்களைத் திரட்டுவதற்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களைப் பெற்றிருந்த த.வெ.க.வுக்கு முதல் திருப்பமாக அமைச்சர் பதவி என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் த.வெ.க. அரசுக்குத் தங்களின் ஆதரவை அடுத்தடுத்து வழங்கின. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மந்திரி பதவி வேண்டாம் என ஒதுங்கிக்கொண்ட நிலையில், மற்ற கட்சிகள் ஆழமான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை அறிவித்தன.

தி.மு.க. தரப்பில் இந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்குள் மிகப்பொரிய பிளவு ஏற்பட்டது. 47 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த அ.தி.மு.க.வில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசை ஆதரிப்பதாக அதிரடியாக அறிவித்தனர். இந்த இக்கட்டான சூழலிலும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தனி ஆளாகத் துரோகங்களைச் சுமந்தபடி உரையாற்றினார். அப்போது, தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தின் மூலம் இழுக்கப்படுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு ஏதுவான முக்கிய ஆதாரங்களையும், சட்டப் புள்ளிகளையும் அவர் தனது உரையில் மறக்காமல் பதிவு செய்தார்.

   

இந்த அதிரடித் திருப்பங்களுக்கு மத்தியில், எடப்பாடிக்கு எதிராகச் சென்ற 25 பேர் குழுவில் இருந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, அந்த 4 தொகுதிகளும் காலியானதாக அரசு இதழில் வெளியிடப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டது. இதனால் 25 பேர் குழு 21 ஆகக் குறைந்த நிலையில், .அடுத்த திருப்பமாக 3 எம்.எல்.ஏ.க்கள் வரும் வாரத்தில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆளுநரைச் சந்தித்துக் குதிரை பேரம் தொடர்பாகப் புகார் அளித்தனர். இதற்கிடையே, சி.வி.சண்முகத்தைத் தவிர்த்து அந்த 21 பேர் குழுவில் இருந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமடைந்து மன்னிப்புக் கடிதம் வழங்கியதால் அரசியல் களம் மேலும் சூடானது.

   

தற்போது எடப்பாடி பழனிசாமி, பேரவை விதிகளின்படி சி.வி.சண்முகம் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களையும் மன்னிப்பதாகக் கூறி, அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அதேநேரம், ராஜினாமா செய்துவிட்டுச் சென்ற 4 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இக்கடிதங்கள் மீது சபாநாயகர் இறுதி முடிவு எடுக்க உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் சட்டப்பிரிவோ துரோகம் செய்தவர்கள் சுமுகமாக அரசியல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. சபாநாயகரின் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தவறிழைத்தவர்கள் மீது சட்ட ரீதியான வழக்குகளைத் தொடர்ந்து ஒரு கத்தியைத் தொங்கவிட்டுக் கொண்டே இருக்க அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.