கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பந்த்வால் அருகே உள்ள தென்கபெள்ளூரு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் பெல்சாட் (41) என்பவர், கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி மாலை தென்கபெள்ளூரு கம்மாஜே பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை நோக்கிப் பாய்ந்து சென்றது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால் பிரசாந்தைச் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பியோடியது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரசாந்தை மீட்டு மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பந்த்வால் கிராமப்புற போலிஸார், தீவிர விசாரணை நடத்தி அமுஞ்சேவைச் சேர்ந்த பிரசாந்த் (38), தென்கபெள்ளூரைச் சேர்ந்த ராமதாஸ் (43) மற்றும் படகபெள்ளூரைச் சேர்ந்த சங்கரா (45) ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார், மேலும் விசாரணைக்காக 3 நாட்கள் காவல் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
