வேறு எந்தவொரு கட்சியிலும் சேருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், தற்போது எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பெருந்துறை பொது மக்கள் அறக்கட்டளை சார்பாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து அவர் மனு ஒன்றை அளித்தார். பெருந்துறை – காங்கேயம் மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைக்காக மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அகலப்படுத்தும் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் மீண்டும் சேருவது குறித்துத் தான் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். அரசியல் லாபத்திற்காகப் பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், தனது முடிவை எப்போதும் வெளிப்படையாகவே அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமக்குச் சொந்தமாகப் பெரிய கல்லூரிகளோ அல்லது தொழிற்சாலைகளோ இல்லாததால், தொழிலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவசரமாக வேறு கட்சிக்குச் செல்ல வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ஓர் அரசின் செயல்பாடுகளைச் சரியாக மதிப்பிட குறைந்தபட்சம் 6 மாத காலம் தேவைப்படும் என்பதால், ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே அதைக் குறை கூற முடியாது என்று தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் பெருந்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்த அவர், கட்சிப் பணிகளின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறியிருந்தார்.
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்த தோப்பு வெங்கடாசலம், சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய போதே, வேறு கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் உடனடியாக இல்லை என்றும், தனது ஆதரவாளர்களுடன் விரிவாகக் கலந்தாலோசித்த பிறகே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே, தற்போது மீண்டும் பரவி வரும் கட்சி மாற்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
