ரூ.10 பாட்டில் பஞ்சாயத்து… குடல் வெளியே வர கொடூரக் குத்து…. தூத்துக்குடி டாஸ்மாக் பாரில் அதிர்ச்சி… தீபாவளி அதுவுமா பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 8, 2026

Spread the love

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருப்பட்டி சொசைட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், நேற்றைய தினம் வழக்கம்போல் விற்பனை பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, தூத்துக்குடி பூபால் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை அந்தோணி என்பவர் மது அருந்துவதற்காக அந்த மதுபான கடைக்குச் சென்றுள்ளார். மது அருந்தி முடித்த பிறகு, காலியான மது பாட்டிலைக் கொடுத்துவிட்டு, அதற்கான வைப்புத் தொகையான பத்து ரூபாயைத் திரும்பக் கேட்பதில் பார் ஊழியர் ஒருவருக்கும் தொம்மை அந்தோணிக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு சிறிது நேரத்தில் கைக்கலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த பார் ஊழியர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தொம்மை அந்தோணியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தொம்மை அந்தோணியின் குடல் வெளியே வந்து, ரத்தம் சொட்டச் சொட்ட அவர் அலறியடித்தபடி பாரை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இக்கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற குடிமகன்களும் பொதுமக்களும் உடனடியாக இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

   

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தொம்மை அந்தோணியை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில் தீவிர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

   

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய அந்த பார் ஊழியரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரைக் கத்தியால் குத்திய இந்தச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.