இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ் கேரக்டரில் விஷால் நடித்திருப்பார். விஷால் நடித்த படங்களில் சண்டக்கோழிக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட படம் இதுதான். ஏனெனில் அந்த கேரக்டரை மிகச் சிறப்பாக உருவாக்கியிருப்பார் மிஷ்கின். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, லண்டனில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு துவங்கி, சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. அதற்கு பின் மிஷ்கின், விஷால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பலவிதமான புகார்களை சொல்லி, மேடையில் மாறி மாறி திட்டிக்கொண்டனர்.
இதுகுறித்து வலைப்பேச்சு ஜெ. பிஸ்மி கூறியதாவது, துப்பறிவாளன் 2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகரித்து போயுள்ளது. ஆனால் அது எல்லா படங்களிலும் நடக்ககூடிய ஒன்றுதான். ஏனெனில் திட்டமிட்டபடி செலவுகள் இருக்காது. பலவிதமான செலவுகள் நடைமுறையில் அதிகரிக்கும். இதைவிட மிஷ்கின் – விஷால் இடையே ஈகோ பிரச்னை அதிகரித்துள்ளது. மிஷ்கின், கரடுமுரடாக பேசக்கூடியவர். மற்றவர் போல ஒரு விஷயத்தை அணுக மாட்டார். அவர் வேறுமாதிரியாக நடந்துக்கொள்பவர். ஒரு கட்டத்துக்கு மேல் சகித்துக்கொள்ள முடியாமல், விஷால் அதற்கான கோபத்தை திருப்பி வெளிப்படுத்தி இருக்கலாம்.
விஷால் கொடுத்த அறிக்கைபடி முதலில் மிஷ்கின்தான் தவறு செய்தவர் என்று தோன்றியது. பிறகு ஒரு மேடையில் பேசும்போது மிஷ்கின் தன்னிலை விளக்கம் கொடுத்தார். அப்போது விஷால் மீதும் தப்பு இருப்பது போல தோன்றியது. இப்படி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் சண்டை உருவாகி இருக்கிறது. இதில் படப்பிடிப்பு தளத்தில் மிஷ்கின் தம்பி தாக்கப்பட்டும் இருக்கிறார்.
லண்டனில் நடந்த ஷூட்டிங்குக்கு தினமும் தாமதமாக மிஷ்கின் வந்திருக்கிறார். தவிர சம்பளமும் மிகவும் அதிகமாக ரூ. 5 கோடி வரை கேட்டிருக்கிறார். முகமூடி படத்தின் சம்பளமும், இந்த படத்தின் சம்பளமும் வேறாக இருந்துள்ளது. மிக அதிக சம்பளம் கேட்டதும் இந்த படத்தில் பிரச்னை ஏற்பட காரணமாக இருந்துள்ளது, என்று கூறியிருக்கிறார்.