இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்று விடுகிறார்கள். ஏன் பிரச்சனை, எதற்கு சண்டை எதனால் விவாகரத்து என்று உட்கார்ந்து பேசி முடிவெடுப்பதெல்லாம் மறந்து போய் தற்போது எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
விவாகரத்து செய்வதற்கு முக்கிய காரணம் சகிப்புத்தன்மை இல்லாதது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பந்தம் மிகவும் புனிதமானதாக இருக்க வேண்டும், விட்டுக் கொடுத்து அன்பான வாழ்க்கையை வாழ வேண்டும். இன்றைய சூழ்நிலைகள் அப்படி கிடையாது. கணவன் மனைவியாக இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு கோடு போட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
சுதந்திரம் என்ற பெயரில் அவரவர் துணையுடன் கலந்து பேசிக்கொள்ளாமல் தனியாக முடிவெடுத்து விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். கூட்டு குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போதோ நாம் தனி குடும்பம் என்று ஆகிவிட்டோம். அதையும் தாண்டி தற்போது கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு விவாகரத்து என்பது முடிவாகிவிட்டது. அப்படி இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் விவாகரத்து அதிகம் நடைபெறுகின்றது என்பது குறித்த தொகுப்பு தான் இது.
இதில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம், 18.7 சதவீதம் கணவன் மனைவினர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் கர்நாடகா 11.7 சதவீதம் கணவன் மனைவினர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். மூன்றாவது இடத்தில் உத்தர பிரதேசம் 8.8%, நான்காவது இடத்தில் மேற்கு வங்காளம் 8.2%, ஐந்தாவது இடத்தில் டெல்லி 7.7 சதவீதத்துடன், ஆறாவது இடத்தில் தமிழ்நாடு 7.1%, தெலுங்கானா 6.7 சதவீதத்துடன், கேரளா 6.3% இருந்து வருகின்றது. இந்த செய்தி மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கின்றது.