“கழுத்தை மிதித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன்”…. காலி மைதானத்தில் துடிதுடிக்கப் பறிபோன உயிர்…. கஞ்சா புகையை முகத்தில் ஊதியதால் விபரீதம்….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

திருவொற்றியூர் விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெய்கோபால் கரோடிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வரலாறு பிரிவில் பயின்று வந்த மாணவர் தனுஷ் (18), கஞ்சா புகைப்பது தொடர்பான தகராறில் சக மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் தாங்கல் வசந்தா நகரைச் சேர்ந்த பெயிண்ட் தொழிலாளி வெங்கடேசனின் இளைய மகனான தனுஷ், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தாக்கப்பட்டுக் கிடந்தது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று நேற்று முன்தினம், பள்ளி அருகே பிளஸ்-1 மாணவர் தானேஷ் என்பவர் கஞ்சா புகைத்துக் கொண்டு, அதன் புகையை தனுஷின் நண்பரான ஜெயகணேஷின் முகத்தில் ஊதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தனுஷ் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று மாலை பள்ளி முடிந்து வந்த தனுஷை மறித்த தானேஷ் மற்றும் அவரது நண்பர்கள், ஜெயகணேஷ் குறித்து கேட்டுள்ளனர். அவர் பள்ளிக்கு வரவில்லை என்று கூறிய நிலையில், தனுஷை வலுக்கட்டாயமாக காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியதுடன், கழுத்தில் காலால் மிதித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

   

தகவலறிந்து வந்த சாத்தங்காடு போலீசார், சுயநினைவின்றி கிடந்த தனுஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், பரிசோதித்த மருத்துவர்கள் தனுஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் பால்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

   

இதற்கிடையே, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், தங்களுக்கு உரிய நீதி கிடைக்கக் கோரியும் தனுஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என அவரது தந்தை தெரிவித்தால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பள்ளி மாணவர் ஒருவர் போதைப்பொருள் தகராறில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.