இந்தியாவைப் பொறுத்தவரை செல்ல பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதை ஐந்தறிவு ஜீவனாக பார்ப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தின் உறுப்பினராக பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அந்த அளவுக்கு பாச உணர்வு அதிகமாக கொண்டவர்கள் இந்தியர்கள்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் செல்லப் பிராணிகளாக நாய்க்கு அடுத்தபடியாக மக்கள் கொண்டாடுவது பசுமாடு தான். ஏனென்றால் இந்து மதத்தில் பசுமாட்டை தெய்வமாக கருதுகின்றனர். அதனால் பசுமாட்டை போற்றி வளர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக சென்று தமிழ்நாட்டில் செல்லப்பிராணிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது கேக் வெட்டுவது பார்ட்டி வைப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதை அவர்கள் தங்களது அன்பின் வெளிப்பாடாக பார்க்கிறார்கள். அந்த ஐந்தறிவு ஜீவனையும் ஒரு குடும்பத்து உறுப்பினராக நினைத்து எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதேபோல் ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வடுகபட்டி என்ற ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஞானவேல். இவர் ஒரு பசுமாட்டை வளர்த்து வருகிறார். அந்த பசு மாடு தற்போது ஒன்பது மாத சினையாக இருந்ததை முன்னிட்டு அந்த பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து 21 தட்டு சீர்வரிசை வைத்து ஐந்து வகை சாப்பாடு வைத்து அந்த பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கியிருக்கிறார். இதை பார்த்து அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
