சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், 500-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றதற்கு விசிகவின் பங்களிப்பே முக்கியக் காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்தார். விசிகவின் வாக்குகள் தவெகவுக்குச் சென்றதால்தான் திமுக தோல்வியடைந்தது எனச் சிலர் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களே இத்தகைய உள்நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார்.
தான் எவ்விதப் பதவிகளையும் தேடிப் போகவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய திருமாவளவன், “நாங்கள் வைத்திருப்பது வெறும் 2 சீட்கள் மட்டுமே, இதை வைத்துக்கொண்டு யாரிடமும் பதவி கேட்கவில்லை; நான் பாட்டுக்கு என் கட்சித் தொண்டர்களின் மூச்சுக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு அவர்களுடனேயே இருக்கிறேன்” என்றார். ஆனால், எங்கோ இருப்பவர்கள் தனக்குத் துணை முதல்வர், முதல்வர் பதவிகள் குறித்தும், நோபல் பரிசுப் பரிந்துரைகள் குறித்தும் தேவையின்றிப் பேசி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக ஒரு தலித் சமூக அதிகாரி நியமிக்கப்பட்டதற்குத் தான் பரிந்துரைத்ததாகக் கூறப்படும் வதந்திகளையும் மறுத்த அவர், 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் சாதி அடிப்படையில் எந்தவொரு அதிகாரியையும் தான் அணுகியது இல்லை என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நம்பி பாமக போன்ற கட்சிகள் இயங்கலாம், ஆனால் விசிக என்றும் சாதாரண உழைக்கும் தொண்டர்களையும், ஆடு மாடு மேய்க்கும் எளிய மக்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறினார். தமக்கு ஆலோசனை வழங்க சிந்தனையாளர்கள் மன்றம் என எதுவும் தேவையில்லை என்றும், மக்களுக்காகப் போராடுவதே தன் பணி என்றும் கூறினார். தனக்கு முதல்வராகும் ஆசை இருக்கிறதா என்று கேட்பவர்களுக்குப் பதிலளித்த அவர், “திருமாவளவனுக்கு முதல்வராகும் தகுதி இருப்பதாக மக்கள் கருதும் காலம் ஒருநாள் வரும், அதுவரை மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, தமிழக அரசியலில் விசிகவும் தானும் தொடர்ந்து திட்டமிட்டு இலக்காக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய திருமாவளவன், திமுக மற்றும் தவெக தலைவர்களின் அரசியல் நகர்வுகள் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பினார். “ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை விஜய் என நான் விமர்சித்த பிறகும், அவரிடம் ஏன் ஆதரவு கேட்டீர்கள் என்று விஜய்யை யாரும் கேள்வி கேட்கவில்லை” என்று சாடினார். மேலும், திமுகவை ‘தீயசக்தி’ என்று விமர்சித்துவிட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு விஜய் ஏன் சென்றார் என்றும், அவ்வாறு வந்த விஜய்யை ஸ்டாலின் ஏன் வரவேற்றார் என்றும், கொள்கை முரண்பாடுகள் கொண்ட இவர்களிடம் யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை எனத் தனது உரையில் திருமாவளவன் அடுக்கடுக்கான வினாக்களை முன்வைத்தார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…