மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுடன் ஒப்பிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், தமிழக மக்கள் தற்போது இருவரைத் தெளிவாக அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருவர் விஜய், மற்றொருவர் சீமான். இவர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்று திருமாவளவன் சாடியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்குத் துணை போகும் எவரும் இந்து மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள் என்பதே அதன் பொருள் என அவர் குறிப்பிட்டார். “பிராமணக் கடப்பாரையைக் கொண்டு பெரியாரின் திராவிடக் கோட்டையை இடிப்பேன்” என்று சீமான் கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு காலம் சீமான் ‘தமிழ் தேசியம்’ பேசுகிறார் என்று நம்பிய நிலையில், தற்போதுதான் அவர் பேசுவது ‘இந்து தேசியம்’ என்பதும், அதுவும் குறிப்பாக ‘பிராமண தேசியம்’ என்பதும் தெரியவந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். திராவிடக் கொள்கைகளையும் பெரியாரியலையும் சிதைக்க நினைப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ்-இன் மறைமுகக் கரங்களாகச் செயல்படுகிறார்கள் எனத் திருமாவளவன் தனது உரையில் எச்சரித்துள்ளார்.
