“சுடர் ஒளியைப் பிடிக்கச் சென்ற வன்னி அரசு”… சட்டென கையை தட்டிவிட்ட திருமாவளவன்…. மேடையில் பரபரப்பு சம்பவம்….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுஒழிப்பு மற்றும் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கிய இம்மாநாட்டில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வன்னி அரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்த தொல். திருமாவளவன், அங்கிருந்த மேடையில் சுடர் ஒளியை ஏந்தி தொண்டர்களுக்குக் காண்பித்தார். அப்போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவும் சுடர் ஒளியைப் பிடிக்க முயன்றபோது, திருமாவளவன் அவரது கையைத் தட்டிவிட்டுத் தானே சுடரை ஏந்திப் பிடித்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

   

இம்மாநாட்டில் தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால், மேடையைச் சுற்றிலும் தொண்டர்கள் முண்டியடித்தனர். இதனால் மாநாட்டுத் திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், திருமாவளவன் தனது உரையைத் திட்டமிட்டபடி முழுமையாகப் பேச முடியாமல் சுருக்கமாக முடித்துக் கொள்ளும் சூழல் உருவானது. பவுன்சர்களும் பாதுகாப்புப் படையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் சிரமப்பட்டனர்.

   

மேலும், விசிக தற்போது திமுக கூட்டணியில் தொடர்கிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) விசிக கூட்டணி வைத்துள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே ஆகும். மாநாட்டில் பேசிய திருமாவளவன், கட்சியின் வளர்ச்சி மற்றும் மதுஒழிப்புத் தேவைக் குறித்தே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.