தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக)திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு இன்று (மே 22) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்குச் சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலின் போது அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, தவெக அரசு தனது அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக-வுக்கு இந்த முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
விசிக-வுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலைச் சிறுத்தைகளின் நீண்ட நாள் முழக்கமும் கனவும் இன்று நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கி ஆட்சியில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும், தேர்தல் கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
