கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்திற்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த வாகனத்தைக் கடத்திச் சென்றது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாகனத்தைத் திருடிய அந்த நபர், அதனை அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு உணவகத்திற்குச் சென்ற அவர், வயிறார சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கிளம்ப முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உணவக ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ரோந்து வாகனத்துடன் இருந்த அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்சத் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் வாகனத்தைத் திருடியதற்காக அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
