திருடச் சென்ற வீட்டில் நகைகளையும் பணத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, போதையில் அங்கேயே குறட்டை விட்டுத் தூங்கிய திருடனை வீட்டின் உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்த விசித்திர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், இந்த இடைவெளியைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரேம்நாத், கதவைத் திறந்து உள்ளே சென்றபோது தரையில் ஒரு நபர் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நபரைத் தட்டி எழுப்பி விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்து பீரோவைச் சோதித்தபோது, அதில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரைத் தப்பவிடாமல் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், பிடிபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த அவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளையடித்த பிறகு, போதை தலைக்கேறியதால் அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது நண்பர் நகைகளுடன் தப்பியோடிய நிலையில், தூக்கத்தால் சிக்கிய தேவராஜை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ருசிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
