கிருஷ்ணகிரி மாவட்டம் யாசின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி எல்லம்மாள். இந்த தம்பதியினருக்கு பெரியசாமி என்ற மகனும் இரட்டையர்களான சுசிதா, சுசிகா என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் சுரேஷ் உயிரிழந்த நிலையில் ஒரு சில மாதங்களில் சுசிகா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் பெரியசாமி, 7-ஆம் வகுப்பு படிக்கும் சுசிதா ஆகியோருடன் எல்லம்மாள் வாழ்ந்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த சுசிதா தனது தாயுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாலை 5 மணிக்கு எல்லம்மாளின் தம்பி மனைவி கிரிஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாயும், மகளும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது வேன் ஓட்டுனரான நவீன் குமார் என்பவர் யாசின் நகரை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நவீன் குமாரின் நண்பரான சத்யராஜ் என்பவருக்கு பணம் தேவைப்பட்டது.
இதனால் நவீன் குமார் தனது மனைவி பிரியங்காவின் தம்பி சந்தோஷ் மூலம் வட்டிக்கு பணம் கொடுக்கும் எல்லம்மாளின் வீட்டிற்கு சென்று பைக் ஆவணங்களை அடமானமாக வைத்து பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அந்த கடனுக்கு வாரத்திற்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என நிபந்தனையுடன் 9 ரூபாய் பணத்தை எல்லம்மாள் நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே வட்டி கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு பணத்தை தராததால் எல்லம்மாள் நவீன் குமாரையும் சத்யராஜையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மீதமுள்ள 7 ஆயிரம் ரூபாயை தருமாறு மிரட்டியுள்ளார். சம்பவம் நடந்த அன்று நவீன் குமாரும் சத்யராஜும் வீட்டிற்கு சென்றபோது எல்லம்மாள் பணத்தை கொடுக்க துப்பில்லை. நீ எல்லாம் எதற்கு வாழ்கிறாய்? எங்காவது போய் சாக வேண்டியதுதானே என பேசி உள்ளார்.
இதனால் அங்கிருந்து சென்ற நவீன் குமாரும் சத்யராஜும் தங்களது நண்பரான ஹரிஷ் என்பவருடன் இணைந்து எல்லம்மாளின் வீட்டிற்கு சென்று அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மகளையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவீன் குமார், சத்யராஜ், ஹரீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
