ஐபிஎல் மற்றும் இந்திய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் குடும்பத்தில் இருந்து மற்றொரு கிரிக்கெட் சாதனையாளர் உருவாகியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் 10 வயது தம்பியான ஆசிர்வாத் சூர்யவன்ஷி தற்போது பீகார் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் நடந்த உள்ளூர் பயிற்சி ஆட்டம் ஒன்றில் தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமிக்காக விளையாடிய ஆசிர்வாத், 87 பந்துகளில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 103 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு 40 ஓவர் உள்ளூர் போட்டியில் ரிஷப் லெவன் அணிக்காக விளையாடி, வெறும் 119 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 168 ரன்கள் குவித்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின் பௌலர் என்றாலும், அவரது தம்பி ஆசிர்வாத் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மிதவேகப் பந்துவீச்சாளர் ஆவார். வெறும் 6 மாதங்களுக்கு முன்புதான் முறையான கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிய ஆசிர்வாத், தனது அண்ணனைப் போலவே பயமற்ற, அதிரடியான பேட்டிங் ஸ்டைலைக் கொண்டுள்ளார். பீகாரில் உள்ள தங்களது வீட்டுப் பின்புறத்தில் இருக்கும் அதே சிமெண்ட் மற்றும் மண் ஆடுகளங்களில்தான் ஆசிர்வாத்தும் தற்போது தீவிரப் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
