ராமநகரா மாவட்டம் கனகபுரா அருகே பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான பிரதீபா என்ற அந்தப் பெண், தனது குடும்பத்தினருடன் கோடிகள்ளி அருகே உள்ள தோட்ட வீட்டில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தற்செயலான மரணமா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் கோடிகள்ளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிரதீபாவின் பெற்றோர், அவரது கணவர் பாபு மீது நேரடி கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பாபு தனது மகளைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை அல்லது விபத்து போலச் சித்தரிக்க உடலை நீச்சல் குளத்தில் வீசியதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர். பிரதீபா, பாபுவின் இரண்டாவது மனைவி என்பதும், அவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புகாரின் அடிப்படையில் பாபுவை கைது செய்துள்ள காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.
