சமூக ஊடகமான ‘X’ தளத்தில் ராகினி பாண்டே என்ற மென்பொருள் பொறியாளர் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவரது நண்பரான மனிஷ் என்பவருக்கு ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 72 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால், மனிஷ் அந்தப் பெரிய ஆஃபரை எவ்வித தயக்கமும் இன்றி நிராகரித்துள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் மனிதவள அதிகாரிக்கு அனுப்பிய மறுப்புச் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ராகினி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மனிஷ் இந்த வேலையை நிராகரித்ததற்கு நிறுவனத்தின் கடுமையான கொள்கைகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வாரத்தில் 5 நாட்களும் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறை, ஊழியர்களுக்கான முறையான விடுப்புக் கொள்கை இல்லாதது மற்றும் புதிய இடத்திற்கு மாறுவதற்கான எவ்வித இடமாற்ற உதவித்தொகையும் வழங்கப்படாதது ஆகியவையே முக்கிய காரணங்களாகும். மேலும், புதிய இடத்தின் வாழ்க்கைச் செலவோடு ஒப்பிடும்போது, இந்த ஆஃபர் தனது முந்தைய சம்பளத்தை விட 25% மட்டுமே அதிகம் என்பதால், இது தனக்குச் சாதகமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகையை நிராகரித்த பிறகும் மனிஷிற்கு எந்தவொரு வருத்தமும் இல்லை என்று ராகினி ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “இவ்வளவு பெரிய தொகையை நிராகரித்தது மிகப்பெரிய தவறு; HR-ஐப் பகைத்துக் கொண்டால் மற்ற நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் பிளாக்லிஸ்ட் செய்ய வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளனர். மறுபுறம், “மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் பணத்தால் என்ன பயன்? ஆரோக்கியமான பணிச்சூழலே முக்கியம்” என்று மனிஷின் முடிவை ஆதரித்துப் பாராட்டி வருகின்றனர்.
